அறிவியல் பூர்வமான இந்துப் பண்பாடு.
இந்துப் பண்பாடு என்பதன் மறுபெயரே இந்தியப் பண்பாடு. நமது பண்பாடு கங்கையைப் போல் புனிதமானது; மானஸரோவர் நீர்போல் தூய்மையானது. பாரதப் பண்பாட்டுக்கு நிகராகக் கூறக்கூடிய அளவில் பாரில் வேறெங்கும் இருந்ததும் இல்லை;இனி இருக்கப் போவதுமில்லை!
நம் பண்பாட்டின் மூலாதாரமே இந்துமதம்தான். வேதங்கள், புராணங்கள்,இதிகாசங்கள், உபநிஷத்துக் கள் ஆகியவையே நமது கலாச்சாரத்தைத் தாங்கும் வலிமையான தூண்கள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே பாரதத்தின் நதிக்கரையோரங்களில் மிகச்சிறந்த பல நாகரிகங்கள் தழைத்தோங்கியிருந்ததாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்துப் பண்பாடு பாரதப் பெண்களைப் புகழின் சிகரத்துக்கே உயர்த்தியது. அவர்களை சக்தியின் அம்சமாகவே பார்த்தது. வேற்று நாட்டுப் பெண்களுக்கு இல்லாத அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவை இந்துப் பெண்களுக்கு - நம் இந்தியப் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. கற்புக்குக் களங்கம் ஏற்படின், அன்று பாரதப் பெண்கள் தங்கள் இன்னுயிரையே மாய்த்துக் கொண்டதாக இந்திய சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.!
பெண்மையே அழகு. அழகுக்கு மேலும் அழகு செய்தால் சொல்லவா வேண்டும்! பெண்களால் ஆபரணங்கள் அழகு பெற்றதா அல்லது ஆபரணங் களால் பெண்கள் அழகு பெற்றனரா என பாரதத்துப் பெண்கள் பற்றி ஒரு விவாதமே நடத்தலாம். பெண்களுக்கும் பெண்கள் அணியும் ஆபரணங்க ளுக்கும் அவ்வளவு பெருமை உண்டு. அதனால் தானே பெண்களின் ஆபரணங்கள் பெயரால் ஐம்பெரும் காப்பியங்கள் உருவாயின!!
ஆபரணங்களைவிடவும் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் பெண்களின் மங்கலச் சின்னங்களான- சந்திரனையொத்த முகத்திற்கு மஞ்சள்; எழில் பொழியும் நெற்றியிலே திலகம்; கூந்தலில் மணம் வீசும் மலர்கள்- இவற்றால் நம் பெண்கள் மற்ற நாட்டுப் பெண்களிலிருந்தும் வித்தியாசப்படுகின் றனர்.!
இதையே கவியரசு கண்ணதாசன்,!
"மலர்கள் சூடி மஞ்சள் பூசி!
வளையல் பூட்டி திலகம் தீட்டி'!
என்று பெண்மையின் இலக்கணத்தைக் கூறுகிறார். !
பாரதத்து ஆடவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு; பக்தி நெறியில் ஈடுபாடு. உலகின் பிறநாட்டு மக்களிட மிருந்து நம்மைப் பிரித்து, உயர்த்திக் காட்டுவதே நமது ஆன்மிகப் பண்பாடுதான்.!
வீரத்துறவி விவேகானந்தரை, அவர் உடையைப் பார்த்து "பஞ்சைப் பரதேசி' என்று ஏளனமாக எக்காளமிட்டது அமெரிக்க சீமான்கள்- சீமாட்டி களின் கூட்டம். அவர்களைத் தனது பண்பால், அடக்கத்தால், நாவண்மையால், சகோதரத்துவப் பிணைப்பால் கட்டியிழுத்து, இந்து எப்படிப் பட்டவன், இந்தியன் எப்படிப்பட்டவன் என்பதை அவர்களுக்குப் புரியவைத்து, அன்னியர்கள் நெஞ்சங்களிலும் இடம் பிடித்தார் விவேகானந்தர்.!
இந்துப் பண்பாட்டை- இந்தியக் கலாசாரத்தைக் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் என்று வர்ணித்த அமெரிக்கர் களை, "சொல்' எனும் சாட்டையை வீசிப் பணிய வைத்தார். அமெரிக்கப் பண்பாடே உயர்ந்தது எனக் கூறியவர்களின் நாவை அடக்க, "எங்கள் பாரதத்தின் ஆண்கள் தாரத்தைத் தவிர மற்ற பெண் களைத் தாயாகப் பார்க்கின்றனர். ஆனால் உயர்ந்ததாக நீங்கள் கூறும் உங்கள் பண்பாட்டில் தாயைத் தவிர மற்ற பெண்களைத் தாரமாகப் பார்க்கிறீர்கள்!' என்று பதிலளித்தார்.!
இன்று உலக நாடுகள் பலவற்றில் இந்துமதம் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் நம் தாய் நாட்டில் இன்று தலைகீழ்நிலையே தென்படுகிறது. கலாச்சாரத்திற்கு மதபேதம்,ஜாதிபேதம், இனபேதம், நிறபேதம் கிடையாது. காரணம் புராதன இந்தியாவில் இந்து மதத்தைத் தவிர வேறெந்த மதமும் இல்லை.!
இன்று பெருவாரியான இந்தியப் பெண்கள் நெற்றியில் திலகம் இடுவது குறைந்து வருகிறது. மங்கலச் சின்னங்கள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன. ஆண்கள் தரப்பிலும் இதே நிலைதான்.!
இந்துமதம் ஏன் நெற்றியில் விபூதி பூச வலியுறுத்தியது? எதற்காக குங்குமம், சந்தனம் தரிக்க வேண்டும் என்று கூறுகிறது என்பதை ஒவ்வொரு இந்தியனும் தெரிந்திருக்க வேண்டும். எந்த மூடப் பழக்க- வழக்கங்களும் நம் மதத்தில் இல்லை. இந்துமதம் அறிவியல் தத்துவங்களையே பக்தி நெறியில் கூறும் ஒரு அறிவியல் மதம்- அற்புத மதம்- தொலைநோக்குச் சிந்தையுள்ள ஒரே மதம்.!
நம் மதத்து விரதங்களும் அறிவியல் தத்துவப் படியே உள்ளன. அமாவாசை, பௌர்ணமி விரதம் இருக்கிறோமே, எதற்காக? இந்த நாட்களில் சூரிய, சந்திர ஒளிகளில் ஊடுருவி வரும் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தால் உடல் நலனுக்குக் கெடுதல் விளையும் என்பதால்தான். இக்கதிர்களின் கதிர் வீச்சால், சமைத்த உணவுப் பண்டங்களில் விஷத் தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே அன்று உணவைத் தவிர்த்து விரதமிருக்கிறோம். ஏகாதசி விரதமும் அறிவியல் விதிப்படிதான் அமைந்துள்ளது. இரவும் பகலும் ஒரு நொடிப் பொழுதும் நிற்காமல் இயங்கிக் கொண்டிருக்கும் நம் உடல் உறுப்புக் களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிதான் விரதம் மேற்கொள்கிறோம். எப்போதும் இயந்திரம் ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருந்தால் அதிவிரைவில் பழுதுபட வாய்ப்புள்ளது அல்லவா! "சூரிய கிரகணம், சந்திர கிரகணங்களின்போது கர்ப்பிணிப் பெண்கள் வெளியே நடமாடக்கூடாது; வளரும் கருவுக்குப் பாதிப்பு ஏற்படும்' என்று வானியல் விஞ்ஞானிகளும் இன்று கூறு கிறார்கள். இதை இந்துமதம் பழங்காலந் தொட்டே வலியுறுத்தி வருகிறது.!
ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் தவிர, ஐந்தாவது வேதமாகக் கருதப்படுவது ஆயுர்வேதம். ஆயுர்வேதம் என்பது உடற்கூறு, வியாதிகள் மற்றும் அதைக் குணப்படுத்தும் ! முறைகளைக் கூறுவது.
நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.
தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது.
மஞ்சள் பூச்சு அன்றைய பெண்களின் அன்றாட வழக்கம். அது அவர்களுக்கு முகப்பொலிவையும், உடல்நலத்தையும் கொடுத்தது. இன்று பல பெண்கள் ரசாயனத்தால் செய்த முக கிரீம்களையே பயன் படுத்துகின்றனர். தங்கள் உடல்நலத்தைத் தாங்களே கெடுத்துக் கொள்கின்றனர். நமது பெண்கள் அன்று தங்கள் கூந்தலைப் பின்னலிட்டு, நறுமணமிக்க மலர்களால் அழகுபடுத்தினர். இயற்கையான வாசனையை உடலில் தவழவிட்டனர். கூந்தலில் சூட்டப்படும் நறுமணம் மிக்க மலர்கள் மருத்துவ குணம் கொண்டவை. தலைவாரி பூமுடித்தல் என்பது சுகாதாரமான நோய்தடுப்பு முறை. கூந்தல் முடி உதிர்ந்து, உணவு வழியாக வயிற்றினுள் சென்றால் உடல்நிலை பாதிப்படையும்.
ஆனால் இன்று ஏற்பட்டுள்ள பண்பாட்டுச் சிதைவுகளினால் பெருவாரியான பெண்கள் பின்ன லிட்டு மலர்கள் சூடுவதை மறந்து வருகின்றனர். முடியை ஆங்காங்கே அலங்கோலமாகக் கத்தரித்து பறக்கவிடுவது, தலைவிரி கோலமாகக் காட்சி தருவது தற்போது புதிதாகப் பரவி வரும் கலாச்சாரம்.
அன்று மரண வீட்டில் மட்டுமே பெண்களை தலைவிரி கோலமாகக் காண முடியும். ஆனால் இன்று ஆலயம் முதல் அங்காடி வரை தலைவிரி கோலமாக- மேல்நாட்டு மோகம் மெல்லக் கொல்லும் நஞ்சாக நம்மிடமும் தொற்றிக் கொண்டது.
தாம்பூலத்தில் சிவந்த செவ்விதழ்கள் இன்று ரசாயன நிறக் கட்டிகளால் அல்லற்படுகின்றன. பழமை வாய்ந்த பாரம்பரியக் கலைகள் அழிவின் விளிம்பிற்கே சென்றுவிட்டன. கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, பரத நாட்டியம் முதலிய பல கலைகள் வெகுசிலரால் மட்டுமே ரசிக்கப்பட்டு வருகின்றன. பாப் பாடல் எனும் பொருள் இல்லாத டப்பாங்குத்துப் பாடல்களுக்கு இளைஞர்களும் இளைஞிகளும் பேயாட்டம் போடுகின்றனர்.
ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஆண்களும் பெண்களும் குடித்து கும்மாள மிட்டதில் பல உயிர்கள் பலிவாங்கப் பட்டதாகச் செய்திகள் வந்தன.
முன்னாளில் பிறந்தநாளின்போது ஆலயம் சென்று ஆண்டவன் சந்நிதியில் தீபமேற்றி வழிபட்டு மங்கலமாகக் கொண்டாடினர். இன்று பிறந்த நாளை கல்யாண மண்டபங்களில் கூட்டத்தைக் கூட்டி, சுடரும் ஒளியை வாயினால் ஊதி அணைத்து (அமங்கலமாக) கொண்டாடுகின்றனர். விவாகரத்து என்பதையே கேள்விப்படாத நமக்கு இன்று அது சர்வ சாதாரணமாகி விட்டது.
சில திரைப்படங்களும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சில நாடகங்களும் கற்பழிப்பு, கொலை போன்ற குற்றச் செயல்களைப் புதிய முறைகளில் செய்வது எப்படி என்பதைக் கற்றுத் தரும் பல்கலைக் கழகங்களாக விளங்கி வருகின்றன.
பண்பாட்டில் உயர்ந்த பாரதம் இன்று பண்பாட்டுச் சிதைவில் சிக்கித் தடுமாறுகிறது. இந்த கலாச்சார சீரழிவுகளைத் தடுக்க நமக்கு இன்னும் பல விவேகானந்தர்கள் தேவை!
No comments:
Post a Comment